புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலக பிரிவில், அதிகளவான சமுர்த்தி பயனாளிகள் வசித்து வருகின்ற நிலையில், உடப்பு கிராமத்தில் புதிய சமுர்த்தி வங்கி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சௌபாக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சமுர்த்தி வங்கி திறந்துவைக்கப்பட்டது.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள குறித்த வங்கியானது, முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது சமுர்த்தி வங்கியாகும்.
முந்தல் சமுர்த்தி வங்கியின் கீழ் இருந்த உடப்பு ஏ, உடப்பு பி, ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவுகளும், மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் கீழ் இருந்த பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவும் குறித்த சமுர்த்தி வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக்க அமல் மாயாதுன்ன, புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் ரவீந்திர விக்ரமசிங்க, புத்தளம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தர்மஸ்ரீ ஜயவர்தன, உதிவிப் பணிப்பாளர் கே.ஜி.குமாரசிங்க, ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் கே.தட்சணாமூர்த்தி, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






