நான்கு பொலிஸார் பலி: விடுமுறை வழங்காததால் விபரீதம்

அம்பாறை − திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.

அவருக்கு விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்குச் செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரைத் தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததோடு 3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ரி – 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சார்ஜனை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply