புத்தளம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு

புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி – கண்டக்குடா பிரதேசத்தில் கூட்டு வலைகளை பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (06.08.2021) பிரதேச கற்றொழிலாளர்கள் சந்தித்து கலந்துரையாடியதை தொடர்ந்து குறித்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில், கடந்த 25 வருடங்களுக்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கூட்டு வலையைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்றொழில் திணைக்களத்தினால், அனுமதியற்ற முறையில் குறித்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட வலைகளை அகற்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற் கொண்டு, கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளுடனான அனுமதியை வழங்குமாறு அதிகாரிகளுக்கு தெரவித்தார்.

மேலும், கடற்றொழில் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்ட வலைகளையும் மீளப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply