சிலர் தன்னை பழிவாங்கும் வகையில் செயற்பட்டுகின்றனர்- ஜெயசிறில்

தன்னை பழிவாங்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேலும் கூறியுள்ளதாவது, “என்னைக் கொச்சைப்படுத்துவதற்காகவும்  பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் பல அரசியல் பிரமுகர்கள் செயற்பட்டுகின்றமையை மிகவும் கவலையாக இருக்கின்றது.

குறிப்பாக நபிகள் நாயகம் தொடர்பாக நான் அவதூறு அறிக்கை விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ் பேசும் இனமாக இரு சமூகங்களும் வாழுகின்ற இந்தப் பகுதியிலுள்ள மதத்தலைவர்கள், பள்ளிவாசல் நிறுவாகத்தினர் பலரும் இவ்விடயம் தொடர்பில் என்னோடு கலந்துரையாடி உண்மை நிலைமையை அறிந்திருந்தார்கள்.

ஆனாலும் சில இஸ்லாமிய சகோதரர்கள் பல அறிக்கைகள் விட்டதோடு பொலிஸில் முறைப்பாடுகளும் பதிவு செய்திருந்தனர்.

இதனால் சமூக வலைதளங்களின் ஊடாக என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தேன்.

எனினும் எனக்கு எதிராக பல முறைப்பாடுகள், கொலை மிரட்டல்கள், நாடாளுமன்றத்தில் பேச்சு என்பன இடம்பெறுகின்றன என்றால் அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்களின் குரலாக நாங்கள் இருக்கின்றோம்.

காரைதீவு மக்களின் நில இருப்புகளைத் தக்க வைப்பதற்காக நாங்கள் செயற்படுகின்றோம் என்பதால், என்னை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகப் பல செயற்பாடுகளைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *