
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள CCTV காணொளி காட்சிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
தற்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை.
அத்துடன் அவர்களுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புபட்டிருக்கவில்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகளின் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் உள்ள சிசிரிவி காணொளி காட்சிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.