தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் வைத்திய அதிகரிகளின் சிபாரிசுடன் தெல்லிப்பளை வைத்திய சாலையில் தடுப்பூசி பெறுவதற்காக சென்ற வேளை, அங்கு காணப்படும் ஊழியர்கள் அவர்களை தரக்குறைவாக பேசி அனுப்பிய சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குடாநாடு முழுவதும் சுகாதார வைத்துய அதிகாரி பிரிவுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த நிலையில், குறிப்பிட்ட சில தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று தடுப்பூசியை பெறுமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தெல்லிப்பளை வைத்திய அதகாரி பிரிவுக்குட்பட்ட நோயாளர்களை நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு சென்று தடுப்பூசியை பெறுமாறு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், 50 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் சிபாரிசுடன் நேற்று காலை 7 மணியளவில் தடுப்பூசியை பெறுவதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற மக்களிடம் ‘இங்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிதான் ஏற்ற முடியும். உங்களுக்கு இன்றையதினம் தடுப்பூசி ஏற்ற முடியாது’ என வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையிலேயே தாம் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் பல வேலைப்பளுக்களின் மத்தியில் இங்கு வந்ததாகவும் இதனால் தமக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சிலர் வாதாடியுள்ளனர்.
அதற்கு அங்கு நின்ற ஊழியர்கள் அவர்களை தரக்குறைவாக பேசி வெளியில் செல்லுமாறு அனுப்பியுள்ளனர்.
இதனால் பெரும் விசனமடைந்த பொதுமக்கள் தடுப்பூசியை பெறாது வெளியேறியிருந்தனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தமக்கான தடுப்பூசியை பெறுவதற்கான நடைமுறைகளை சீர்படுத்துமாறு ஊடகங்களுடாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.