புதிய சுற்றுநிருபனத்திற்கு அமைய அரச பணியாளர்கள் சேவைக்கு!

அரச நிறுவனங்களுக்குப் பணியாளர்களை அழைக்கும்போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன.

கடந்த 6 ஆம் திகதி, இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது. அதன்படி, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியால் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுகள், மாகாண பிரதம செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள், ஆகக்குறைந்தது வாரம் ஒன்றில் 3 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்கும் வகையில் குழுவொன்றை நியமித்து அக்குழுவால் தொடர்ந்து சேவைகளை வழங்கும் வகையில் கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் குழுவில் உள்ள ஊழியரால் தமக்குரிய பணிநாளில் சமூகமளிக்க முடியாதவிடத்து, அது அவரது தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும்.

மேலும், கர்ப்பிணிப் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நோய் அறிகுறிகளை கொண்டிருக்கும் அல்லது வேறெந்த நியாயமான காரணிகளால் கடமைக்கு சமூகமளிக்க முடியாதுள்ள ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அல்லது அருகிலுள்ள பணியிடம் ஒன்றில் கடமை புரியும் வசதிகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply