பொதுச் சுகாதார பரிசோதகர் பொலிஸாரின் எடுபிடியாகவே செயற்பட்டார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் யாழில் இன்று (09) வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வானப்பேரணி ஆரம்பித்து இடைநடுவில் பொலிஸார், சுகாதார பரிசோதகர் மற்றும் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு இடையில் சுமூகமற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் பேரணி நிறைவுற்றதன் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவிக்கையில்,
நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுவதாக பொலிஸாரும், சுகாதார பரிசோதகரும் தெரிவித்திருந்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர் பொலிஸாரின் எடுபிடியாகவே செயற்பட்டிருந்தார்.
எமது பேரணியை நிறுத்தி திரும்பி அனுப்ப முயன்றனர்.
தனிமைப்படுத்தல் மீறப்படும் என்ற குற்றச்சாட்டினை நாங்கள் எதிர்த்து நின்றோம்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அச்சுறுத்தும் வகையில் கைது செய்ய தயாராக இருந்தார்கள்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை காரணமாக வைத்து எமது தொழிற்சங்க போராட்டங்களை அடக்க முடியாது என தெரிவித்தார்.