648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டம்! SamugamMedia

இந்த வருடம் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் இந்த வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 578 மில்லியன் ரூபா செலவில் 760 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய நிதி கிடைத்த பின்னர் இந்த வருடத்திற்குள் வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திறைசேரி நிதியின் கீழ் 76 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத வேலைத் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக திறைசேரியினால் 3,750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply