ஜேர்மனியில் தமிழர்கள் அதிகம்வாழும் Dortmund நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நம் மக்கள் சார்ந்து பல்வேறுபட்ட விடயங்களை கலந்துரையாடினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கையில்,
அன்று யுத்த சூழலால் எம் மக்கள் புலம்பெயர்ந்தார்கள். இன்று வருமானத்துக்காக எம் மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் இந்நாட்டில் எம்மக்களின் இருப்பு சனத்தொகை ரீதியாக, பண்பாட்டியல் ரீதியாக, பிற ஆக்கிரமிப்புகள் என பல்வேறு வழிகளில் கேள்விக்குறியாகிறது. எங்கள் மாவட்டங்கள் நாட்டின் வறுமை மாவட்டங்களாக மாறியுள்ளன.
நாம் உலகம் முழுதும் பரந்து இருந்தாலும் தாய் நிலத்தில் நம் இருப்பை இழந்தால் நம் அடையாளத்தை இழந்துவிடுவோம்.
ஆகவே புலத்துக்கும், தாய் நிலத்துக்குமான பிணைப்பை இன்னும் உறுதியாக்க வேண்டியது அவசியமாகிறது. இது அரசியலுக்கானதல்ல. நம் மக்களுக்கானதும் நம் புலம்பெயர் உறவுகளின் தலைமுறைகளுக்குமானது.
எம்மக்கள் மீதும், மண் மீதும் எமது புலம்பெயர் உறவுகளின் இரண்டாம் தலைமுறை அதீத அக்கறை கொண்டுள்ளது. பல்வேறுபட்ட திட்டங்களை, திறமை பரிமாற்றங்களை, வழிகாட்டல்களை வழங்க அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களுக்கான ஒத்துழைப்பை வழங்க நான் தீர்மானித்துள்ளேன் – என குறிப்பிட்டுள்ளார்.