ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படும் கிளிநொச்சி பசுமைப்பூங்கா – மக்கள் கவலை samugammedia

ஆபத்தான நிலைக்குள் கிளிநொச்சி பசுமைப்பூங்கா தள்ளப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள குறித்த பசுமை பூங்காவில் சிறுவர்கள் தமது பொழுதை கழிக்க அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய நிதியில் அமைக்கப்பட்ட குறித்த பூங்காவானது, மாவட்டத்தின் மக்களிற்கு பொழுது போக்கக்கூடிய ஒரேயொரு பிரதான இடமாகவும் அமைந்துள்ளது.

கிளிநொச்சி மக்களின் பொழுதுபோக்கு வசதியை மேம்படுத்தும் நோக்குடன் “சுகித புரவர“ திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபா செலவில் நிரமானிக்கப்பட்ட குறித்த பசுமை பூங்காவானது கடந்த 22.02.2019 அன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பூங்காவில் சிறுவர்களிற்கான பொழுது போக்கு வசதிகள் அதிகளவில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட போதிலும், அவை தற்பொழுது படிப்படியாக அழிவடைந்து வருகின்றதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிரதானமாக காணப்படும் தொங்குபாலமானது 1,400,000 ரூபா செலவில் கரைச்சி பிரதேச சபையினால் 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 

குறித்த தொங்குபாலமானது தற்பொழுது பாதுகாப்பு வசதிகளின்ற ஆபத்தான நிலையில் உள்ளது.

சுமார் 20 அடி உயரமான தொங்கு பாலத்தின் இரு பகுதியிலும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அமைப்புக்கள் தற்பொழுது ஆபத்தானதாக மாறி வருகின்றது. 

இதனால் சிறுவர்கள் குறித்த தொங்குபாலத்தை பயன்படுத்தும்போது பெற்றோர் மிக அவதானமாக செயற்பட வேண்டிய நிலை காணப்படுவதுடன், தனியாக சிறுவர்கள் விளையாடும்போது ஆபத்து ஏற்படக்கூடிய மிக பயங்கரமான நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, மேலும் பல சிறுவர் விளையாட்டு இடங்கள் பாதுகாப்பானதாகவோ அல்லது பயன்படுத்தக்கூடியதாகவோ இல்லை. இருக்கைகள் அழிவடைந்து காணப்படுவதுடன், அவற்றை பயன்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்றது.

இதேவேளை, குழந்தைகள் பயன்படுத்தும் ஊஞ்சலை தாங்கும் கம்பிகள் உக்கி ஆபத்தினை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

குறித்த பூங்காவை பராமரிப்பதற்காக பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் நிதியிலிருந்து, இவற்றை பராமரிக்காமை தொடர்பிலும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த பூங்காவை புனருத்தானம் செய்து, பாதுகாப்பானதும், பிள்ளைகள் தமது பொழுது போக்கினை சிறப்பாக கழிக்க கரைச்சி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Leave a Reply