சாவகச்சேரியில் மணற் கொள்ளையர்களால் ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

சுயாதீன ஊடகவியலாளரும், தேர்தல் கண்காணிப்பாளருமான சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசனுக்கு தொடர்ச்சியாக மணற்கொள்ளையர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி மணற் கொள்ளைக் குழுவினர் ஊடகவியலாளருடைய தந்தையாருக்கு விபத்தினை ஏற்படுத்தி விட்டு அது தொடர்பான பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னர் இரவு வேளையில் தொலைபேசியில் ஊடகவியலாளருக்கு அழைப்பை எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அத்துடன் தாம் விபத்து ஏற்படுத்திய சம்பவத்தை வெளியே தெரிவித்தாலோ, பணம் தராவிட்டாலோ மீண்டும் இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்துவோம் எனவும் கூறி மிரட்டியுள்ளனர்.

அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சுபேசன் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் தொடர்ச்சியாக பல தடவைகள் தொலைபேசியில் அழைப்பெடுத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன்-அவருடைய தேர்தல் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்த நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னராகவும் கள்ள மணல் அகழ்வு தொடர்பாக அறிக்கையிட்டமைக்காக மேற்படி ஊடகவியலாளரை மணற் கொள்ளையர்கள் அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *