வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது!

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின்போது 20 வயதுடைய இளைஞன் ஒருவனே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வேலணை பிரதேசத்தில் அண்மைக் காலமாக பெறுமதிமிக்க வளர்ப்புக் கால்நடைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வரும் நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறைபாடுகள் வழங்கியும் திட்டமிட்ட இந்த திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் தமது கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலணைக்கு வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பட்டா ரக வாகனம் ஒன்றில் 5 பேரடங்கிய கும்பல் ஒன்று சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அவதானித்த மக்கள் குறித்த நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர்.

நிலைமையை சுதாகரித்துக்கொண்ட மக்கள், பட்டா ரக வாகனத்தை மறித்து அதில் இருந்த ஒருவரையும் இறைச்சியாக்கப்பட்ட மாட்டுடன் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏனைய நால்வர் தப்பியோடிய நிலையில் பொலிசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *