பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; பெண்ணொருவர் படுகாயம் – கொடிகாமத்தில் சம்பவம்!

பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்ணொாருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்துச் சம்பவம்  கொடிகாமம்  ஏ-9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில்  இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துத் தொடர்பில் தெரிய வருவதாவது, 

எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஏ-9 வீதியில் ஏற முற்பட்ட போது,  திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.  

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி என்ற பெண் படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply