பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பலாலி விமான நிலையத்திற்கு அதிகளவான விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, விமானப்
போக்குவரத்துக் கட்டணத்தை மேலும் குறைப்பது தொடர்பாகவும் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய வகையில் காணப்படுகின்ற பலாலி சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி காலம்தாழ்த்தப்படுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று சபையில் கேள்வியெழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து  போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் ” யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும். பலாலி சர்வதேச விமானநிலையத்திலிருந்து தற்போது
நாள்தோறும் சென்னை மற்றும் திருச்சி விமானநிலையங்களுக்கு சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளுக்கான முழுமையான வசதிகள் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த விமான நிலையத்தின் வருமானம் தொடர்பில் குறிப்பிட்டால் 2021ஆண்டில் இந்த விமான நிலையத்தின் ஊடாக எந்த வருமானமும் கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் 41 மில்லியன் நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 5 மில்லியன் வருமானம், நஸ்டம் 82 மில்லியன் ஆக காணப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் வருமானம் 152 மில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் 182 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல் பலாலியில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதாக இருந்தால், ஓடுபாதை, நுழைவு பாதை தரிப்பிடம் போன்ற ஏனைய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். மேலதிகமாக காணிகளையும் சுவீகரிக்க வேண்டும்
ஆகவே இது தொடர்பான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து மேலதிக தகவல்களை என்னால் கூறமுடியும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தால் பெருமளவு நிதியைப் பயன்படுத்தும் மத்தள விமான நிலையத்தைப் போலல்லாமல், யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு வினைதிறனாக மாற்ற நாம் உறுதியாக இருக்கின்றோம்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக விமானப் போக்குவரத்து கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *