வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் 26 ஆம் திகதி வரை பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மேற்காவுகைச் செயற்பாட்டுக்கான அடிப்படைகள் உருவாகியுள்ளன. நீராவியின் மேலுயர்த்துகையும் , கீழ் மாறன் மண்டலத்தின் மேல் பகுதியில் நிகழும் வளி குளிரடைதல் செயற்பாடும் இந்த மழைக்கான அடிப்படைகள்.
கடந்த பல நாட்களாக மிக அதிகமான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வட மத்திய, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இந்த மழை பெரிய ஆறுதலாக அமையும்.
ஆனால் மழை கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அதிக வெப்பநிலையுடனான வானிலை தொடரும்.
இன்று வரையான தரவுகளின் அடிப்படையில் உண்மையான மற்றும் உணரக்கூடிய வெப்பநிலை அடிப்படையில் இந்த ஏப்ரல் மாதமே அதிக அளவிலான வெப்பநிலை நிலவும் ஏப்ரல் மாதமாக பதிவாகியுள்ளது.
கடந்த 19 நாட்களில் வடக்கின் அளவிடப்பட்ட வெப்பநிலை சராசரியாக 36.3 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 36.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்







