நாடு பயங்கர பொருளாதார நெருக்கடியின் விளிம்பில்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

நாடு கடுமையான பொருளாதார ஆபத்தை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் தவறான புள்ளிவிவரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி, உண்மை நிலையை மறைத்து பால் மா மற்றும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். 

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச விதிகளின்படி ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது குறைந்தது 3 மாத இறக்குமதி மதிப்பிற்கு சமமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் கூறும் 7 பில்லியன் டொலர் கையிருப்பில் பயன்படுத்த முடியாத 1.2 பில்லியன் சீன யுவான் உள்ளடங்கியுள்ளதால், எம்மால் 5.8 பில்லியன் டொலர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றார். 

மேலும், மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதால், நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணி வருவாய் மேலும் குறையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, வரும் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடு முடிவுக்கு வரும் நிலையில், 2028 ஆம் ஆண்டு முதல் நாட்டின் அந்நியச் செலாவணிக் கடன் திருப்பிச் செலுத்தல் 1.5 பில்லியனிலிருந்து 3.5 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். 

நாட்டின் கையிருப்பு 13.4 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என IMF கூறியுள்ள போதிலும், தற்போது அதில் 50 சதவீதமே உள்ளதாகவும், இந்த இலக்கை அடைய மாதந்தோறும் 600 மில்லியன் டொலர் தேவைப்படும் நிலையில் தற்போதைய மாதாந்த கையிருப்பு 60 மில்லியனாக மட்டுமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்வதைத் தடுக்க, இப்போதிருந்தே அழுத்தங்கள் குறைந்த, அடுத்தகட்ட IMF உடன்படிக்கையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அத்துடன், துறைமுக விலையில் எரிபொருள் வழங்குதல், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான தரமான உரம் போன்ற தேர்தல் கால வாக்குறுதிகள் எதனையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றாமல் விவசாயிகளையும் மக்களையும் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Leave a Reply