அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிய கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில், புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவரில் பின்னால் அமர்ந்திருந்த மூவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியின் யாலேகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற மற்றொரு விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி நோக்கிப் பயணித்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத வாகனமொன்று பாதசாரி ஒருவரை மோதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயமடைந்த பாதசாரி பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விபத்தை ஏற்படுத்திய வாகனமும் சாரதியும் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.





