திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் நேற்று (25) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் இன்னும் அகற்றப்படாமல் காணப்படும் வெடிபொருள் மாசுபாடு தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி, நடவடிக்கைகள் முறையாக ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி , திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களும் நிகழ்நிலை மூலம் கலந்து கொண்டனர்.
தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் (NMAC) மற்றும் பிராந்திய கண்ணிவெடி நடவடிக்கை அலுவலகம் (RMAO) சார்பில் பிராந்திய கண்ணிவெடி நடவடிக்கை அதிகாரி, கண்ணிவெடி நடவடிக்கை அதிகாரி, செயற்பாட்டு அதிகாரி மற்றும் தகவல் முகாமைத்துவ நிபுணர், இலங்கை இராணுவத்தின் 7 SLE பிரிவின் பிரதம அதிகாரி மற்றும் Mine Advisory Group (MAG) அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் கண்ணிவெடி சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அரசாங்க நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய பிரதேச செயலாளர்களின் ஊடாக அறிவித்து, சரியான ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புணர்வு முறைமைகளை பேணுவதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.





