மாந்தை மேற்கு மீனவர்களின் பிரச்சினைகள் கவனத்தில் – எம்.பி. ரவிகரன் நேரில் ஆய்வு

மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக, கீலிக்கரையான்பிட்டி களப்பு பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். 

இதன்போதே மீனவர் சங்கத்தினரால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த கீலிக்கரையான்பிட்டி களப்புப் பகுதியில் 09 கிராமங்களைச் சேர்ந்த 60 வரையான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் 02 கிலோமீற்றர் தூரமான படகு ஓடுபாதை சீரின்றிக் காணப்படுவதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக கீலிக்கரையான்பிட்டி மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவ்வாறு குறித்த படகு ஓடுபாதை சீரின்றிக் காணப்படுவதால் மீனவர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதுடன், படகுகளை தள்ளிச் செல்ல வேண்டிய நிலையும் காணப்படுவதாக மீனவர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு படகுகளைத் தள்ளிச் செல்லும்போதும், நடந்து செல்லும்போதும் மீனவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இத்தகைய சூழலில் குறித்த படகு ஓடுபாதையை ஆழப்படுத்தித் தருமாறு பல தடவைகள் தம்மால் பல்வேறு தரப்புகளிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த படகு ஓடுபாதையை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கீலிக்கரையான்பிட்டி மீனவர்களின் குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த 02 கிலோமீற்றர் வரையிலான படகு ஓடுபாதையை ஆழப்படுத்துவதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

Leave a Reply