பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களின் கீழ், குற்றவாளிகளாகக் காணப்படும் நபர்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டப்பணத்தை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவு, ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்க வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தங்களின் கீழ், பொது அல்லது தனியார் கைத்தொழில் நிறுவனமொன்றில் சிறுவர் ஒருவரை வேலைக்கு அமர்த்தியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்படும் எந்தவொரு நபருக்கும் 100,000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படலாம். இது தற்போது நடைமுறையிலுள்ள அதிகபட்ச தண்டப்பணத்தை விட பத்து மடங்கு அதிகமாகும்.
மேலும், 18 வயதுக்குட்பட்ட ஒருவரை வேலைக்கு அமர்த்தி குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு 100,000 ரூபா வரையிலான தண்டப்பணம், 12 மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம் என அந்த சட்டமூல வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும், பணியிடங்களில் சிறுவர்கள் சுரண்டப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.





