
வடமாகாணம் முழுவதும் இராணுவத்தினர் குவிந்து காணப்படுகின்றனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். 30 வருட காலமாக இராணுவத்தளபாடங்களை வாங்குவதற்காக கடன் உதவிகளை வாங்கியதால் தற்போது பொருளாதார பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இன்று, இந்திய பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், கட்சி சார்பாகவும் தன்னை சந்தித்து கலந்துரையாடியதாக சி.வி விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
இன்றைய தினம் யாழில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலாலி விமானத்தளத்தை மிக விரைவாக திறக்க வேண்டும். தென்னிந்தியாவிற்கு வட இலங்கைக்கும் இடையில் படகு சேவை மிக விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். நேற்றைய தினம், இவ்விரண்டையும் பார்வையிட்டதுடன், இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பா.ஜ.க மாநிலத்தலைவர் கூறியிருந்தனர்.
ஸ்டார்லினால் மத்திய அரசாங்க அனுமதியுடன் இலங்கைக்கு உணவுப்பொருட்கள் தர இருப்பதாக அறிவித்திருந்ததை தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என 4 பிரிவிற்கும் சமனாக கொடுக்கலாம் என்ற கருத்தினை பலரும் இணைந்து கலந்தாலோசித்து கூறுவதாக தெரிவித்திருந்தனர்.
தற்போது உள்ள தமிழர்களுக்களுக்குரிய 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நீக்குவதாக இருந்தால் இந்தியாவினுடைய அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கான கூட்டு சமஷ்டி யாப்பினை கொண்டு வந்த பிற்பாடுதான் நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி கூறியிருந்தேன்.
வடமாகாணம் முழுவதும் இராணுவத்தினர் குவிந்து காணப்படுகின்றனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். 30 வருட காலமாக இராணுவத்தளபாடங்களை வாங்குவதற்காக கடன் உதவிகளை வாங்கியதால் தற்போது பொருளாதார பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இராணுவத்தினரின் தொகை குறைக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினையை ஏற்கனவே தமிழ் மக்கள் 30 வருடகாலமாக அனுபவித்து வந்துள்ளார்கள். குண்டு வீச்சினையும் சந்தித்தார்கள், இதனை பற்றி எவரும் கவலைப்படவில்லை.
எனினும் இந்த பொருளாதார பிரச்சினைகளை நாடு பூராகவும் மக்கள் அனுபவிக்கிறார்கள், காகில்ஸ் போன்ற கடைகளில் பொருட்கள் இல்லை. பணம் இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை காணப்படுவதாக கூறியதால், இது தொடர்பாக இந்தியா பொருளாதார ரீதியாக நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் எனவும் கூறியிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட சந்திப்பில் ஒன்றை கூற மறந்த விடயமாக, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஒரு பாதையினை அமைக்க வேண்டும். அதற்காக 100 கோடி செலவாகும் எனக் கணித்திருந்ததுடன், அதனை இந்தியாவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை ஊடகங்களூடாக தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சி மாற்றத்தினால் இந்த பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. அரசியல்வாதிகள் நாடகமாட பாக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுவதாக தெரியவில்லை. எனவே ஆட்சி மாற்றம் தொடர்பாக ஒரு மயக்க நிலையில் உள்ளது.- என்றார்.




