ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து புதிய பிரதி சபாநாயகர்?

வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தமது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள போதிலும் ஜனாதிபதியினால் அது ஏற்றுக் கொள்ளப்படாதமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தமையை அடுத்து கடந்த 5ஆம் திகதி அவர் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.

எனினும் சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்து, அவர் மீண்டும் பிரதி சபாநாயகராக பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் நாடாளுமன்றில் கருத்துரைத்த முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலேயே தாம் குறித்த பதவியை வகிக்க உள்ளதாக அறிவித்தார்.

குறித்த காலம் தற்போது நிறைவடைந்துள்ளதோடு, பிரதி சபாநாயகர் பதவியில் வெற்றிடம் நிலவுகிறது. பிரதி சபாநாயகர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல,

நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதி சபாநாயகர் பதவிக்காக தமது தரப்பில் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படும் என குறிப்பிட்டார்.

Leave a Reply