மே09 வன்முறை;கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தொழிங்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டங்களை இலக்கு வைத்து கடந்த 09ம் திகதி அரச ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மே 9ம் திகதி இலங்கையில் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எதிராக அமைதி வழியில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஐபக்சவின் கூலிப்படைகள் ஆகியோருடன் இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட காவல்துறை பணிப்பாளர் தேசபந்து தென்னக்கோன் உட்பட பல அரச பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேற்கொண்ட அராஐகமான வன்முறையில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை சுமார் 1056 அப்பாவி பொதுமக்கள் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேற்படி கைதானது இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு சட்டத்தின் கீழ் முறையற்ற கைது நடவடிக்கை ஆகும். அதற்கான அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன.

தொடர்சியாக பல நாட்கள் அமைதியாக கூடாரங்கள் போட்டு காலி முகத்திடலில் “கோட்டா கோ கோம்”, மற்றும் “மைனா கோ கோம்” என்ற பதாகைகளை மாத்திரம் ஏந்திய படி பொதுமக்கள் தமது எதிர்ப்பினை இலங்கை அரசிற்கு எதிராக எழுப்பி வந்த நிலையில் “மே 9” அன்று கொல்லுப்பிட்டியில் உள்ள மஹிந்த ராஐபக்சவின் அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய கலவரக்கும்பல் நேராக அமைதிவழி எதிர்ப்பாளர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மேற்படி தாக்குதல்கள் இடம்பெறும் போது பணியில் இருந்த காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தமையானது இந்த வன்முறையானது முழுக்க முழுக்க மஹிந்த தரப்பினரால் அரச ஆதரவுடன் இடம்பெற்றது என்பதற்கு தகுந்த ஆதாரம்.

இத்துடன் வன்முறைக் கும்பல்காரர்களுடன் காவல்துறை அதிபர் மற்றும் இலங்கை அரச பாராளுமன்ற உறுப்பினர்களும் காணப்பட்டமை ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலவரக்கரர்கள் பொதுமக்களின் சொத்துக்களையும், தங்கும் கூடாரங்களையும் அழித்து முற்றாக சேதம் விளைவித்திருந்தனர். இவையனைத்தும் காவல்துறையினரின் கண்களுக்கு முன்பாகவே நடைபெற்று இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தின் மூலமாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் மற்றும் ஊடகவியலாளர் வாசுந்தர போன்றோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றமையும் கலவரக்காரர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் அப்பாவி பொதுமக்கள் 1056 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கை ஜனநாயகத்தின் சட்ட முறைமைக்குட்பட்டு சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் சர்வதேச அரசியல் உரிமைகள் சாசனம் ஆகியவற்றிடம் மிகவும் சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply