இனப்பிரச்சினையைத் தீர்த்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது! – சந்திரிக்காவின் சுடலை ஞானம்

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதார பிரச்சனை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோத்தாபய பதவி விலகவேண்டும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் நலன்கருதிச் செயற்படாமல் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது ஆட்சிக் காலத்தில் தீர்வை வழங்க நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஒரு பக்கத்தில் விடுதலைப் புலிகளும் மறுபக்கத்தில் அன்றைய எதிர்க்கட்சியினரும் குழப்பியடித்தார்கள்.

அதன் பின்னரும் தீர்வை வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. நல்லாட்சி அரசின் காலத்தில்கூட தீர்வு சம்பந்தமான விடயத்தில் முன்னேற்றகரமாக நகர்வுகள் இருந்தாலும், இறுதிக் கட்டத்தை அடைய முடியாமல் போய்விட்டது. இதற்கு நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ராஜபக்சக்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்து தாமே ராஜாக்கள் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதைச் சாதித்தார்களே தவிர, தீர்வு விடயத்தில் துளியளவும் அக்கறை செலுத்தவில்லை.

போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் அசமந்தமாகாவே ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மகிந்த விலகியதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் அந்தப் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த இந்த அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதி கோத்தாபய அனைத்து மக்களின் வேண்டுகோளையும் புறம்தள்ளி பதவியில் இருக்கின்றார்.

வீதிகளில் இறங்கிப் போராடும் மாணவர்கள் மீது பொலிஸார் மனிதாபிமானம் பாராது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி அவர்களைத் தாக்கி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை இன்னும் மோசமான நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

ஜனாதிபதி கோத்தாபய உடன் பதவி விலக வேண்டும். பிரதமர் ரணில் அரசியல் நலன் கருதிச் செயற்படாமல் அனைத்து இன மக்களின் நலன்கருதி சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந் தப் பொருளாதார நெருக்கடி தீர்வைக் காண முடியும் என்றார்.

Leave a Reply