கல்முனையில் தமிழ் பிரதேச அரச காணி அபகரிப்பு – இளைஞர் சேனை, பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அரச காணியை தனியார் ஒருவர் சொந்தம் கொண்டாடி அபகரிக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பொதுமக்களும் இளைஞர் சேனை உறுப்பினர்களும் பங்கு பற்றிருந்தனர்.
குறித்த அரச காணியில் தனியார் ஒருவர் தனக்கு உரிமை கோரி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆர்ப்பாட்டத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தற்காலிகமாக கட்டிடம் அமைக்கும் பணியை நிறுத்தியதுடன் நீதிமன்றத்துக்கு குறித்த விடயத்தினை எடுத்து செல்வதாகக் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கல்முனை 01 C பிரிவில் உள்ள குறித்த அரச காணியான இங்கு மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோடி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த காணியில் தனியார் ஒருவர் கட்டிடம் கட்ட முற்பட்ட வேளையில் முன்பும் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் தமிழ் இளைஞர் சேனை உறுப்பினர்கள் விரைந்து சென்று காணி அபகரிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன் பொலிஸாரும் வருகை தந்து கட்டிடம் கட்டும் முயற்சியை நிறுத்தினர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லையில் உள்ள காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகவா காணி அதிகாரம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து பறிக்கப்படுகிறது.
கல்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள அரசகாணியை இன்றும் அபகரிக்க முயற்சி – கல்முனை வடக்கு பிரதேச செயலக காணி அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி இதற்காகவா?











