
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டதையடுத்து அவற்றை பார்வையிட பெருமளவான மக்கள் கொழும்புக்கு படையெடுத்து வருகின்றனர்.
தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பஸ் சேவைகள் தடைப்பட்டு தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள போதிலும் நேற்றும், இன்றும் பெருமளவான மக்கள் இவ்விடங்களை பார்வையிட வந்துள்ளனர்.
பெருந்தொகையான மக்கள் புகையிரதங்களில் கொழும்புக்கு வந்ததால் புகையிரதங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அனைத்து திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அந்த இடங்களுக்கு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கிலோ மீற்றர்கள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து வளாகத்திற்குள் நுழைந்தனர்.
குறிப்பாக ஜனாதிபதி மாளிகையை காண மக்கள் ஆர்வம் காட்டினர்.
இனி இந்த மாளிகைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், சிரமங்களை பொருட்படுத்தாமல் பெருமளவு மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
இந்த மாளிகைகளுக்குச் செல்பவர்கள் அதிலுள்ள தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், தொலைபேசிகள், குளியல் தொட்டிகள், உடற்கட்டமைப்பு உபகரணங்கள், படுக்கைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதையும் சுற்றித் திரிவதையும் காணலாம்.
கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பன மக்கள் புரட்சியினால் கையகப்படுத்தப்பட்டு இன்னும் பொதுமக்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபாயவும், அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவும் ஏற்படுத்தியிருந்த சொகுசு வாழ்க்கை ஏற்பாடுகளை பார்த்து மக்கள் கடுமையான கோபமடைவதையும் அவதானிக்க முடிந்தது.
இதன்போது கோத்தா கோ கிராமம் இருந்த மக்கள் பொது நூலகமும் ஜனாதிபதி செயலகத்தில் செயற்பாட்டாளர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்




