குருந்தூர் மலை: விகாரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு,ஜுலை 14

குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற  நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான், முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை  ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும்  அகற்றுமாறும், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

அத்துடன், குறித்த  பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் குறித்த இடத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும்  நீதிவான் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின்  ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக  அறிக்கையிடுமாறு தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply