உணவு, தொழில் இன்றியே எனது மகன் போராட்டத்திற்கு சென்றான்! உயிரிழந்தவரின் தந்தை கதறல்

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டின் தாக்கத்தினால் நேற்று முன்தினம் உயிரிழந்த இளைஞரின் தந்தை கண்ணீருடன் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஹவ தலதாகமவில் வசித்து வந்த டி.எம்.ஜாலிய திஸாநாயக்க (26) என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

நேற்று முன்தினம் (13) கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சென்ற போது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

பின்னர் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே அவர் தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த போது, ​​உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் தந்தையான மஹவ பிரதேச சபை உறுப்பினர் அசங்க திஸாநாயக்க தெரிவிக்கையில்,

உணவோ, தொழிலோ இல்லாத விரக்தியிலேயே தனது மகன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றான்.

எனது மகனுக்கு திருமணமாகிவிட்டது. முச்சக்கரவண்டி வைத்துள்ளார். ஆனால் இந்த நாட்களில், எண்ணெய் பிரச்சனை காரணமாக, பெரும்பாலானவர்கள் எண்ணெய் வரிசையில் இருந்தனர்.

நான்கைந்து நாட்களாக வரிசையில் காத்திருந்து வருகின்றனர். அதனால் அவருக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை.

மகனும் எரிவாயு பிரச்சினையால் அவதிப்பட்டான்.அவர் வாடகை வீட்டில் குடியிருந்தது வேறு விஷயம். குழந்தைக்கு பால்மா இல்லை.

அனைத்து வருமான ஆதாரங்களும் நிறுத்தப்படும்போது அழுத்தம் வரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நான் மஹவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர். எனக்கும் அந்த பிரச்சனைகள் உள்ளன.

நாட்டு மக்களின் அழுத்தத்தையும் வேதனையையும் நான் நன்றாக உணர்கிறேன்.

அந்த அழுத்தம் தாங்க முடியாமல் மகன் கொழும்பில் போராட்டத்திற்கு சென்றார்.

நாட்டின் உயரிய பதவிகளில் இருக்கும் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் மக்கள் படும் துன்பங்களை கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு அதிகாரம் மட்டுமே தேவை.

நாட்டின் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது நிறுத்தப்பட வேண்டும். பதவிப் பேராசையால் இன்று என் மகன் உயிரைக் கொடுத்தான்

மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆட்சியாளர்களால் ஒரு நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள். பாவம் மக்கள். மக்கள் படும் துன்பத்தைக் கண்டு மகன் மிகவும் அதிர்ச்சியடைந்தான்.

இன்று நம் மக்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்.

என் மகன் இந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் தன் உயிரை விலை கொடுத்துள்ளான்.

நாளை இன்னொருவர் உயிரைக் கொடுப்பதற்கு முன் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் – என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply