
கொழும்பு, ஜுலை 15
யுத்தத்தை வெற்றிக்கொண்ட பாதுகாப்பு செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டுக்கு ஆற்றிய சேவை மதிக்கத்தக்கது. எதிர்கால தலைமுறையினரின் மனங்களில் நீங்கா இடம்பிடிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 3 0வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானமிக்க பொறுப்புக்களை நிறைவேற்றிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று ரீதியிலான வெற்றியை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று மாத காலத்துக்குப் பின்னர் கொவிட் -19 பெருந்தொற்று தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் சவாலை ஜனாதிபதியாக அவர் எதிர்கொண்டார்.
உலக அரசியலில் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானித்தோம்.அதிகாரம் மற்றும் பதவி ஆகியவற்றை கைவிடுவது அரிதானது.அரசியல் அதிகாரத்தை துறந்தவர்கள் விரல் நீட்டி சுட்டிக்காட்ட கூடியவர்கள்.
அன்றும்,இன்றும் இலங்கை வரலாற்றில் எந்த ஜனாதிபதியும் தனது பதவி காலம் நிறைவடையும் முன்னர் பதவி விலகவில்லை.அது நெருக்கடியான தீர்மானமாகும்.
ஜனாதிபதி (முன்னாள்)அந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டார். பதவி காலத்தில் அரைவாசி காலம் உள்ள நிலையில் அவர் பதவி விலகல் கடிதத்தில் கைச்சாத்திட்டார்.யுத்தத்தை வெற்றிக்கொண்ட பாதுகாப்பு செயலாளராகவும்,ஜனாதிபதியாகவும் நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை மதிக்கத்தக்கது.எதிர்கால தலைமுறையினரின் மனங்களில் நீங்கா இடம்பிடிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.



