முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்கள்

கொழும்பு,ஜுலை 16

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நான் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, போட்டியின் முதலாவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி 222 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணிசார்பில் அதிகபடியாக தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 22ஆவது அரைச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் 115 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்களாக இவ்வாறு அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

அத்துடன், ஓசத பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும், மகீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 58 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதேபோல், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதேவேளை, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 13 ஓட்டங்களுடனும், இமாம் உல் ஹக் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அத்துடன், பாபர் அசாம் 1 ஓட்டத்துடனும், அசார் அலி 3 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் கசுன் ராஜித, ப்ரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Leave a Reply