ஜனாதிபதி பதவிக்கு நான்கு முனைப்போட்டி நிலவும் சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டங்கள், பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்றன என்று அறியக் கிடைக்கின்றது.
ஜனாதிபதி தெரிவுக்கான பிரசாரங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளமையை சமூக ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன.
தாம் விரும்பிய – சார்ந்த வேட்பாளர்களை ஆதரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் கோரியுள்ளனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே. வி. பி. தலைவர் அநுரகுமார திஸநாயக்க, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த டலஸ் அழகப்பெரும ஆகியோர் பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்களை வழங்கவுள்ளனர்.
ஜனாதிபதிக்கான தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விடயம் அந்தக் கட்சிக்குள் முரண்பாட்டை உருவாக்கியுள்ளது. இதனால், ரணில் ஆதரவு அணி – டலஸ் ஆதரவு அணி என அந்தக் கட்சியினர் இரண்டாக பிளவுற்றுள்ளனர்.
விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றோரின் 10 அரசியல் கட்சிகளும் தமது கோரிக்கைகள் தொடர்பில் வேட்பாளர்களுடன் பேசிய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
இதேசமயம், வாக்களிக்க வரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை முற்கூட்டியே (வெள்ளிக்கிழமை) வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப் பதிவை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்

