
இலங்கை நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு இந்தியாவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தக் கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பார் என்று தெரிய வருகின்றது. இந்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தியாவின் பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
மேலும், இலங்கை நெருக்கடியால் இந்தியாவுக்கு – குறிப்பாக தமிழ்நாட்டுக்கு தஞ்சம் கோரி வரும் அகதிகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. பொருளாதார தஞ்சம் கோருவோரை அகதிகளாக அங்கீகரிப்பதில் இருக்கும் சிக்கல் குறித்தும் ஆராயப்படும்.
அத்துடன், முகாம்களிலுள்ள அகதிகள் விடயத்துக்கும் சர்வகட்சி கூட்டம் மூலம் தீர்வு எட்டப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் ஆகியோரை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதன்போது இலங்கை நிலைமை குறித்து கவலை வெளியிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நேரடியாக அனுப்ப அனுமதி பெற்றிருந்தார்.
இலங்கையில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியையும்
இராஜிநாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, எரிபொருள் – எரிவாயு தட்டுப்பாடு, விவசாயம் சார் பிரச்னைகளில் மோசமாக இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது.
இதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், சிக்கலாகவும் மாறியுள்ளது.
இந்நிலையிலேயேசர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்
கப்பட்டுள்ளது.
இதேவேளை, நெருக்கடியை சமாளிப்பதற்கு 380 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்

