நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறினால் மீண்டும் நீதிமன்றிற்கு செல்வோம்! து.ரவிகரன்

நீதிமன்ற கட்டளையை பொலிஸார் மீறுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லும் நோக்கத்தில் இருக்கின்றோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு குமுழமுனை குருந்தூர் மலை விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் பாரம்பரியமும், மிகவும் தொன்மையான ஆதிசிவன் ஐயனார் கோயில் காலங்காலமாக சைவ தமிழர்களால் பூஜை வழிபாடுகளை செய்து வந்த தலம். 2018.09.06 ஆம் திகதி குருந்தூர் மலை தொடர்பில் போடப்பட்ட வழக்கின் கட்டளையின்படி புதிய கட்டுமானங்கள் அமைக்கக் கூடாது என்ற கட்டளையோடு பல கட்டளைகள் அதனுள் அடங்கும்.

ஆனால் 2022.06.12 ஆம் திகதி மிக பெரியளவில் புத்தர் சிலை அமைக்கும் நோக்கத்தில் பாரிய பௌத்த மத திணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலயத்தில் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அன்றைய தினம் மக்களும், மக்கள் பிரநிதிகளினதும் பாரிய எதிர்ப்பினால் பௌத்த மத திணிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

மீண்டும் நாம் 2022.06.16 ஆம் திகதி அதாவது இவர்கள் 2022.06.12ஆம் திகதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நான்கு தினங்களுக்கு பின்னர் நானும், குமுழமுனை கிராம மக்களான சசிகுமார், சிறீஸ்கந்தராசா ஆகியோரும் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு தாக்கல் செய்தோம்.

அதாவது 2018.09.06 இன் வழக்கின் கட்டளைக்கு எதிரான வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதாகவே நாம் இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்தோம்.

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் மிகவும் சிறப்பான முறையிலே குறித்த தவணைகளில் வாதாடினார்கள். அதாவது 23.06.2022 ஒரு தவணையும் , 30.06.2022 ஒரு தவணையுமாக இரண்டு தவணைகள் போடப்பட்டு அதற்கான விசாரணைகள் நடைபெற்று 14.07.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பின்வரும் கட்டளைகளை பிறப்பித்தார்.

அதன் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அவர்கள் குருந்தூர் மலைப்பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரைகள், சிலைகள், சுருபங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும், அகற்றப்பட வேண்டும் என்ற கட்டளையும், அமைக்கப்பட்ட கட்டுமானங்களை அகற்றிய பின்னர் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அடுத்து பாரம்பரிய குருந்தூர்மலை ஆதிசிவன் ஐய்யனார் பூஜை வழிபாடு நிகழ்வுகளை எந்த விதத்திலும் யாரும் தடுக்கக்கூடாது என்ற கட்டளையும் பிறப்பித்தார். அடுத்து குறித்த பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக காணப்படுவதனால் அது தொடர்பான ஆய்வு அறிக்கைகளை தொல்லியல் திணைக்களத்துக்கு விடுமாறு அறிவித்தல் விடப்பட்டது.

தொடர்ந்து அந்த கட்டளையிலே குறித்த இடத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படாத வகையில் பொலிஸார் தமது பாதுகாப்பினை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இவை தான் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

இதற்கு அடுத்ததாக பொலிஸார் இந்த நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்ற நிலையை நாங்கள் எதிர்பார்த்து குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்ற ஒரு எண்ணத்தோடு இருக்கிறோம்.

ஏனென்றால் எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் செய்யாமல் இருந்தால், பொலிஸார் நீதிமன்ற கட்டளைகளை மீறுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் திரும்பவும் நீதிமன்றத்துக்கு செல்லும் நோக்கத்தில் இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply