மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இக்கடினமான சூழலில் மருத்துவ சமூகத்திற்கு ஆதரவு அளிக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்ள மருத்துவ சமுகம் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எரிபொருட்களை பெறுவதற்காக சாதாரண பொதுமக்களுடன் மருத்துவ சமூகமும் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்கின்றது.
இந்நிலையில் பாரிய கடமைப்பழுவின் மத்தியிலும் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க அதிபரின் அனுமதியுடனான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலை சமூகத்தினருக்கு எரிபொருள் நிரப்புவற்தகு சிலர் இடையூறாக இருந்தமையும் சமூக ஊடகங்களில் அவதூறாக கருத்துக்களை உருவாக்குவதும் மிகவும் வேதனையளிக்கிறது.
வடபகுதியில் 1983ம் ஆண்டுகால அளவில் பல மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் நாட்டுப்பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்தனர்.
இலங்கையில் மிகவும் கடினமான இக்காலத்தில் பொதுவெளியில் மருத்துவ சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும்.
இதனால் பாரிய சமுக வெற்றிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது போன்று ஏற்படலாம். எனவே மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இக்கடினமான சூழலில் மருத்துவ சமூகத்திற்கு ஆதரவு அளியுங்கள ” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்

