
அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்தல் மற்றும் நாட்டின் குடிமக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் சவாலான பணியை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய நாடாளுமன்றத்திற்கு கடமை உள்ளது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய நிலையில் நீண்ட போராட்டம் தனது முதன்மை நோக்கத்தை அடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்னடைவுகள் மற்றும் இழிந்த அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார்.
இந்தநிலையில் ஜனநாயகம் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான பிரசாரம் தொடர வேண்டுமானால் போராட்டத்தின் அடுத்த கட்டம் மிகவும் முக்கியமானது.
இதனடிப்படையில் ஜனாதிபதி பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு பணியாற்றுவதற்கு நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போதைய நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகாரத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு மத்தியில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாமல் மக்களின் பார்வையில் மதிப்பிழந்துள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு கட்சியும் அதன் தலைவர்களும் பழைய இழிவான அரசியலை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி பதவிக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் உண்மையான அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சவாலான பணியை உடனடியாக ஆரம்பிப்பதற்கு புதிய ஜனாதிபதி ஒருவரை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் இலங்கைக்கு தேவைப்படுகிறது.
எனவே ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கட்சி அல்லது கட்சித் தலைவர் என்பதை விட முதன்மையாக மக்களின் பிரதிநிதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று இலங்கை திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த சில மாதங்களாக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் இலங்கை மக்களும் சர்வதேச சமூகமும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அசாதாரண பொறுப்பை நிறைவேற்றும் திறன் தைரியம் மற்றும் விவேகம் உள்ளதா என்பதை உற்று நோக்குவதாகவும் இலங்கை திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
பிறசெய்திகள்



