கள்ளக்குறிச்சி மாணவி சாவு: நீதிகோரி கலவரம் வெடித்தது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்றுவந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம் அருகேயுள்ள மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றுவந்த குறித்த மாணவி கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் பாடசாலை விடுதியின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என பாடசாலை நிர்வாகத்தால் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த பெற்றோர் பதறியடித்து பாடசாலைக்கு விரைந்த நிலையில் தமது மகளின் இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என சின்னச்சேலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவியின் உடலை வாங்க மறுத்து 5 நாள்களாகப் போராட்டம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவி உயிரிழக்கும் முன்னே உடலில் காயங்கள் இருந்தன என்றும் அவரது கை,கால்கள் உடைந்திருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்தநிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டபோதும் போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசியெறித்து தாக்குதல் நடத்தியதில் கள்ளக்குறிச்சியில் பெரும் கலவரம் வெடித்தது.

பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியும் கூட்டத்தைக் கலைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் மாணவி இறப்பின் சந்தேகத்தில் பாடசாலை ஆசிரியர்கள் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி, அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் மனுதாரர் வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Leave a Reply