ஜனாதிபதி தேர்வுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடர்பானது

கொழும்பு,ஜுலை 18

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத்தாக்கலுக்காக நாடாளுமன்றம் நாளை(19) கூடவுள்ளது.

ஜனாதிபதி தெரிவிற்கான சட்டத்தின்படி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு அறியப்படுத்திய தினத்திலிருந்து ஜனாதிபதியை நியமிக்கும் வரையில் எந்தவொரு விடயதானங்களையும் நாடாளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் உள்ளடக்க முடியாது.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

நாளை நாடாளுமன்றம் கூடியதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரகளின் வேட்புமனுக்களைக் கையளிக்குமாறு நடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்கவினால் அறிவித்தல் விடுக்கப்படும்.

அதன் பின்னர் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் வேட்பாளர்களை முன்மொழிவர்.

இதனை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் வழிமொழிவர்.

இதன்போது தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர், பரிந்துரை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது அவசியமாகும்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்காவிட்டால் அவர் நிராகரிக்கப்பட்டவராக கருதப்படுவார்.

அதன் பின்னர் வேட்பாளர் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்டத்திற்கு அமைய சபாநாயகர் தவிர்ந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரேனும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும்.

அதேநேரம் இது தொடர்பில் எந்தவித மட்டுப்பாடுகளும் இல்லை.

சபாநாயகர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாக முடியாவிட்டாலும் ஜனாதிபதி பதவிக்கு போட்யிடும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியுமென்பது விசேட அம்சமாகும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நாளைய தினமும் வாக்கெடுப்பு நடைபெறும் நாளை மறுதினமும் நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்தாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

Leave a Reply