இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மலையக மக்கள் சொல்லொன்னா துயரங்களுக்கு முகங் கொடுத்துக்கொண்டு அமைதிகாத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எமது மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அதிகாரத் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாக கனகராஜ் கருத்து தெரிவித்தார்.
தற்போதைய நிலைக்கு நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வந்த இனவாதமும் சோம்பேறித்தனமும் காரணமாகும். நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாய் திகழ்ந்த பெருந்தோட்ட பொருளாதாரத்தை இனவாத கண்ணோட்டத்தில் கையாண்டதால் தான் பெருந்தோட்டத்துறை இன்று பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் தோட்டங்களில் காணப்படுகின்ற கைவிடப்பட்ட தரிசு காணிகளை அந்தந்த தோட்டங்களில் இருக்கின்ற குடும்பங்களுக்கு வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரதை கொண்டு செல்வதற்கான வாய்ப்பை தரும்படி கேட்டும் எமது கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றது.
கண்ணுக்கு முன் காணிகள் காடாக கிடக்கின்ற போது அதில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்துவதற்கு வாய்ப்பைத் தர இனவாதிகளுக்கு மனமில்லை. டொலரின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது அதேபோல தொழிலாளர்களின் வாழ்க்கை செலவும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
ஆறு வருடங்களுக்கு முன் கோரிய ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை நடத்த முடியாது என்பதை அரசு தெரிந்து கொண்டும் எமது மக்களை எவரும் கண்டு கொள்வதில்லை. பெருந்தோட்ட பகுதிகளில் பட்டினியால் பரிதவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூர்த்தி வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களில் தோட்டங்களில் வாழ்பவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே கணிக்கப்படுகிறார்கள்.
பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வேண்டப்படாதவர்கள் தோட்டங்களில் குடியிருந்தால் அரச காணி சட்டத்தின் அபாயகரமான பக்கங்களை பயன்படுத்தி மலையக மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடியிருப்புகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
200 வருடங்களாக வாழ்ந்த குடும்பங்களை இரண்டு வருடங்களுக்கு தோட்ட முகாமையாளராக வந்தவர் அரசு காணி சட்டத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்துகிறார்.
இந்த அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு மனித உரிமை அமைப்புகள் முன் வருவதில்லை. பெருந்தேட்ட மக்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவே 22 பெருந்தொட்ட கம்பெனிகளின் கைகளில் பெருந்தோட்டங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
பெருந்தோட்ட கம்பெனிகள் இனவாத அரசாங்கங்களின் கைக்கூலிகளாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன. தோட்டக்காணிகளை பெரும்பான்மை இன மக்கள் கை வைக்கும் போது கண்டு கொள்ளாமல் இருக்கின்ற பெருந்தோட்ட கம்பெனிகள் அதைத் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்த முற்பட்டால் தோட்ட கம்பெனிகள் காவல் நிலையங்களுக்கு சென்று விடுகின்றன. இதுதான் இந்த நாட்டின் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதாகும்.
பொதுவாக நாட்டின் மக்கள் பட்டினியால் பரிதவிக்கின்ற போது நாட்டின் அரசியல் தலைவர்கள் அடுத்து யார் ஆட்சியை கைப்பற்றுவது என்பதிலேயே அதிக நாட்டம் செலுத்துகின்றனர்.
இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரியான முறையில் கையாளக்கூடிய வேட்பாளரை இனங்கண்டு தூர நோக்கோடு செயல்பட வேண்டும்.
மலையக மக்களுக்கு குறிப்பாக நுவரெலிய மாவட்டத்திற்கு வருத்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பிரதேச செயலகங்களை கூட வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
அண்மையில் தமிழக அரசு வழங்கிய மனிதாபிமான நிவாரணங்களை வழங்குவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் மறுத்துவிட்டனர். அவர்களால் இது அரசியல் தலையீடு என்று கூறினாலும் உண்மையில் இதில் இனவாத உள் நோக்கம் இருப்பதை எவரும் மறுத்து விட முடியாது.
அதனால்தான் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தமிழர்களை கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கும் படி நாம் கூறி வருகிறோம். மாகாண சபை அரசியல் என்பது எமது மக்களுக்காக பெரிதாக சேவை செய்ய முடியாத அமைப்பாகும். ஆனால் சில விடயங்களில் எமது மக்களின் இருப்பை இனவாதத்தால் சிதைக்க விடாமல் தடுக்க முடிந்திருக்கிறது.
அந்த மாகாண சபை முறை மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாடு எவ்வளவு தான் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டாலும் இனவாத சிந்தனையில் இருந்து விடுபடும் என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.
காலிமுக திடலில் துளிர்விட்ட இன ஒற்றுமை மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், சமூர்த்தி மற்றும் கிராம உத்தியோகத்தர் காரியாலயங்கள், தொழில் திணைக்களங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் எல்லாம் பிரதிபலிக்காத வரை நாடு புதிய பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறார்களா? என்பதில் விளக்கம் இல்லாத நிலையே காணப்படுகிறது.
எமக்கான விடுதலைக்கு நாமே அத்திவாரமிட வேண்டும். பலமான நிற்பந்தங்கள் தான் கடந்த காலங்களில் நமக்கு சில வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. கடந்த காலங்களில் எமிடையே ஏற்பட்ட பிளவுகளும் சிதைவுகளும் சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிட்டன.
தற்போது அந்த நிலைமை மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பல்வேறு வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற உணர்வை நமது தலைமைகள் உணரும் காலம் உருவானால் அமைதியாகவும் அடிமையாகவும் வைத்துக்கொண்டு செயற்படும் பேரினவாதத்திற்கு முடிவு காண முடியும். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்

