ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பு – த. தே. ம. முன்னணி பங்கேற்காது!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றில் நாளை புதன்கிழமை நடக்கவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில்உள்ளவர்கள் எவரும் தமிழ்த் தேசிய மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்த ஒரு விதத்திலுமஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் மற்றும் தெற்கு மக்களின் எதிர்பார்ப்புகளுக்குக் கிட்டவாகக்கூட போட்டியாளர்கள் இல்லை.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியமக்கள் முன்னணி வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக இந்த முடிவை எடுத்தது.

ஜனாதிபதி தெரிவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்த போது, ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டபோது எடுத்த வேகத்திலேயே அனைவராலும் நிராகரிக்கப்பட்டது. இன்று நாட்டின் குழப்பங்களுக்கு அவரும் காரணம்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தொடர்ச்சியாகவே அவரும் உள்ளார். தமிழ் மக்களின் இனப்பிரச்னை தீர்வு விடயத்தில் அவர் கடந்த காலத்தில் நேர்மையாக நடந்ததில்லை என்பதாலேயே அவர் நிராகரிக்கப்பட்டார்.சஜித் பிரேமதாஸ மாற்று நிலைப்பாட்டை கொண்டிருப்பார் என்று நினைத்தோம்.

ஆனால், அவர் அப்படி இருக்கவில்லை. அவருடன், நடத்திய கலந்துரையாடலில் இந்தியாவிலுள்ள பஞ்சாயத்து முறைமையை இனப் பிரச்னைக்கு தீர்வாகக் கூறுத்கிறார்.

அவருக்கு இனப் பிரச்னையின் ஆழம் புரியவில்லை. இதனால், அவரையும் மத்தியகுழு நிராகரித்தது.

தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸநாயக்கவின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினோம். தமிழர் பிரச்னை தீர்வுவிவகாரத்தில் அவர்களுக்குள்ளேயே சரியான புரிதல் இல்லை.

புதன்கிழமைக்கு முன்னர் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிலைப்பாட்டுக்கு வர முடியாது. உத்தரவாதம் இல்லாமல் நாம் அவர்களுக்கு ஆதரவு வழங்க முடியாது – என்றும் அவர் கூறினார்.

பிறசெய்திகள்

Leave a Reply