ரயில் பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு!

ரயில் நிலையங்களில் ரயில் பயணச் சீட்டுகள் முடிவடையும் தறுவாயில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையில் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்களில் அதிக அளவான பயணிகள் பயணிப்பதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காலப்பகுதியில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது குறித்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைப் போன்று ரயில் எஞ்சின்களிலும் பயணிகள் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ரயில் நிலையங்களில் ரயில் பயணச் சீட்டுகள் முடிவடையும் தறுவாயில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்க அச்சக திணைக்களத்தில் காணப்பட்ட ரயில் பயணச் சீட்டுகளை அச்சிடும் இயந்திரம் தற்போது ரயில்வே திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த அச்சு இயந்திரத்தை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதிய அளவு நியமிக்கப்படாமையின் காரணமாக குறித்த பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்படாத பட்சத்தில் கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, வெயாங்கொடை, ராகம உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் உப ரயில் நிலையங்களிலும் ரயில் பயணச் சீட்டுகள் முடிவடையும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் பயணச் சீட்டுகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply