
நிபந்தனைகளை ஏற்கத் தயாரில்லாதவர்களை ஆதரித்து எமது மக்களுக்கும் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களுக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அன்புக்குரிய தமிழ்த் தேச மக்களே! நாளைய ஜனாதிபதித் தெரிவு தொடர்பாகச் சகல வேட்பாளர்களோடும் தமிழினத்தின் அபிலாஷைகளையும் நலன்களையும் முன்னிறுத்திப் பேச்சுக்களையும் பேரம்பேசல்களையும் மேற்கொண்டோம்.
சஜித் பிரேமதாசா தமிழரின் இனப்பிரச்சனைக்குத் தீர்வாகப் பஞ்சாயத்து முறையையே பரிசீலிப்பாராம்.
(அவர் தற்பொழுது போட்டியிலிருந்து விலகிவிட்டார் என்பது வேறுவிடயம்)
ரணில் விக்கிரமசிங்கவும் டளஸ் அளகப்பெருமவும் ராஜபக்ஷாவினரைப் பாதுகாப்பராம்.
அநுர குமார திஸாநாயக்க சார்பில் உறுதியற்ற – தெளிவற்ற மழுப்பல் பதில்களே வழங்கப்பட்டன.
(இவரின் கட்சியே வடக்குக் கிழக்கைப் பிரிக்க முன்னின்றமையும் நினைவில் கொள்ளத்தக்கது)
ஆகவே தமிழரின் நியாயமான அபிலாஷைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனாதிபதித் தெரிவிலிருந்து ஒதுங்குகின்றோம்.
எமது நிபந்தனைகளை ஏற்கத் தயாரில்லாதவர்களை ஆதரித்து எமது மக்களுக்கும் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களுக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டோம்.-என்றுள்ளது.
பிறசெய்திகள்





