
யாழ்ப்பாணம்,ஜுலை 19
தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளேன்.
அவரின் உறுதிமொழிக்கமைய நடுநிலைமை என்ற தனது முடிவு சில வேளைகளில் மாறலாம் என விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (20) புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிகளின் ஆதரவை கோரும் முயற்சிகளில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் நடு நிலையாக செயற்படப் போவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பனருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனினால் ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச விலகியதால் உங்கள் நடு நிலைமை என்ற முடிவில் மாற்றங்கள் ஏதாவது உண்டா என அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.





