இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பிச் செல்லும்போது மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதன்படி ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பிச் சென்ற அவர் போர் கப்பலில் மாலை நேரம் வரையில் கடலில் தரித்து இருந்ததாகவும், இதன் பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு செல்லும் வழியில், இந்தியாவின் ஊடாக மாலைத்தீவுக்கு செல்லும் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். எனினும் அதனை இந்திய தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மாலைத்தீவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில் அடுத்த நாள் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு திரும்பி கட்டுநாயக்க விமான தளத்தை அடைந்திருக்கின்றார் .
அங்கு கோட்டாபயவை தவிர சுமார் 14 பேர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பசில் ராஜபக்ச, எவன்கார்ட் ஆயுத நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, லிட்ரோ நிறுவன முன்னாள் தலைவர் தேசர ஜெயசிங்க ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
இறுதி நேரத்தில் அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் அவருடைய பாரியாரும் அதேபோன்று 2 பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு மாத்திரமே அதிதிகள் பிரிவின் ஊடாக செல்ல முடிந்த்துள்ளது. ஏனையோர் சாதாரண பயணிகள் பிரிவின் ஊடாக செல்லமுடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவ்வாறு சாதாரண பயணிகள் பிரிவின் ஊடாக சென்றால் பயணிகள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஏனையோர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
ஏற்கனவே கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இவர்கள் பாரிய ஊழலில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





