
ஜனாதிபதி பதவிக்காக நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தினார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற அடிப்படையில், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனை உறுதிப்படுத்தினார்.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் தமது கட்சியின் தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அதேநேரம், நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் தற்சமயம் கொழும்பில் இடம்பெறுகின்றது.
கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை ஆரம்பமானது
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இன்று மாலை 7 மணிக்கு கூடி, ஜனாதிபதி பதவிக்கான போட்டியில், எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்க உள்ளது.
அதேநேரம், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்த் குமார், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமது இந்தத் தீர்மானம் குறித்து, அவர் இன்று ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அதேநேரம், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க, ஆளுந்தரப்பு சுயாதீன நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆளுந்தரப்பு சுயாதீன உறுப்பினர்கள் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது. தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படும் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவினால், வேட்பு மனுக்கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்த பதவிக்கு போட்டியிடவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான டலஸ் அலகப்பெருமவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
பிறசெய்திகள்





