வேட்பாளர்களிடம் தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகள்

கொழும்பு,ஜுலை 19

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பிரதான ஆறு தமிழ் தேசியக் கட்சிகளால் ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய இந்த ஆவணத்திற்கு வேட்பாளர்கள் வழங்கும் பதிலின் அடிப்படையில், தமிழ் தேசிய கட்சிகள் தமது நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியன இந்த ஆவணத்தை கையளித்துள்ளன.

இன்று காலை 3 வேட்பாளர்களிடமும் ஆவணம் கையளிக்கப்பட்டது.

அந்த ஆவணத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு,

இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் இந்தத் தீவின் பூர்வீகக் குடிகளின் வழித்தோன்றல்கள். பௌத்தம் இந்நாட்டில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டது. இரு சமூகத்தினரும் நீண்ட காலமாக இந்த நாட்டில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இனிமேலும் அவர்கள் நட்புடன் வாழ முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. தமிழர்கள் சமத்துவமாகவும் கெளரவத்துடனும் வெளித் தலையீடுகள் இன்றி வாழ்வதற்கான தங்களை தாங்களே ஆளும் உரிமையை நாடுகின்றனர்.

1833 ஆம் ஆண்டில் நிர்வாக நோக்கங்களுக்காக பிரித்தானியரால் நாடு ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னர், தமிழர்கள் ஆளுகைக்குட்பட்ட தமிழ் மொழி பேசும் ஒரு தனிப்பகுதி இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் செய்து முடிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் அடுத்தடுத்து ஒற்றையாட்சி அரசியலமைப்புகள் இயற்றப்பட்ட போதிலும் , வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் மொழியே பேசுகின்றனர்.

1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து மலையகத் தமிழர்கள் உட்பட தமிழர்கள் பல்வேறு பாகுபாடுகளுக்கும் அவதூறுகளுக்கும் உள்ளாகி வருகின்றன.
பிரித்தானியர்களால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் வழங்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பு, வடக்கு கிழக்கில் சிறுபான்மையினராகவும் மற்ற இடங்களில் பெரும்பான்மையாகவும் இருந்த சிங்களவர்களிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்தது. இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையினர் இதுவரை தமிழர்கள் மீது ஆட்சியதிகாரமும் மேலாதிக்கம் செலுத்தவும் வழிவகுத்தது. 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம், பெரும்பான்மையான தமிழ் பேசும் பகுதிகளில், சிங்கள மொழி திணிக்கப்பட்டமை அத்தகைய ஆதிக்கத்தின் அடையாளமாகும்.
அதேசமயம், ராஜபக்சேக்கள் தங்கள் ஊழல் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளை மறைப்பதற்காக இராணுவத்திற்கும் மற்றும் பிற இடங்களிலும், தமிழர்களைப் பயங்கரவாதிகளாகவும் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்தனர். சமீபத்திய காலங்களில், சிங்கள பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் மீது கட்டவிழித்த அட்டூழியங்களையும், இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

சிங்கள பெளத்த வாக்குகளைப் பெற ஏப்ரல் 21, 2019 ஆம் ஆண்டின் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தாங்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்த ஜனாதிபதிக்கு எதிராக வாக்காளர்கள் திரும்பியுள்ளனர்.
இலங்கையில் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் துர் எண்ணத்தை உருவாக்கி இருந்ததை நாடு இப்போது பெருமளவில் உணர்ந்துள்ளது, ஆனால் இந்த தீவின் பல்வேறு மக்களிடையே இந்த புரிந்துணர்வு ஏற்படுமிடத்து நல்லிணக்கம் உண்மையில் சாத்தியமாகும்.

அரசியல் ரீதியாக நாடு ஒரு புதிய பக்கத்தை திருப்ப ஆரம்பித்திருக்கும் இவ் வேளையில், இதுவரை செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க அரசியல் தவறுகளை விரைந்து திருத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

எனவே, ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான நாங்கள், நீண்ட காலமாக புரையோடியிருக்கும் இனப்பிரச்சனை க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடியாக எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளை இதன்மூலம் முன்மொழிகிறோம்.

  1. ஐ.நா.வின் சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மீதான உடன்படிக்கை. விதிகளின் பிரிவு 1 இன் படி இலங்கைத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அவர்கள் இச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்குகிறார்கள். எனவே இதுவரை மத்திய அரசால் நடை முறைப்படுத்தப்பட்ட மேலாதிக்க ஆட்சி முறைமை மற்றும் நிர்வாகம் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இது புதிய ஜனாதிபதியின் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தல் வேண்டும்
  2. புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப் படுவதற்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போதுள்ள தமிழர்களின் உடனடிப் பிரச்சனைகளுக்கு பின்வரும் தீர்வுகள் காணப்பட வேண்டும்
    . ஐ.நா.வில் உறுதியளித்தபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

    . ப.த. ச இன் கீழ்கைது செய்யப் பட்டு தடுப்புக் காவலிலும் தண்டனை பெற்றும் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சிறப்பு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்.
    ப.த.ச இன் விதிகள் நாட்டின் சாதாரண குற்றவியல் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக்காட்ட தேவையில்லை.

    இ. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆணைக்குழு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம, மற்றும் இராணுவப் படைகள் மற்றும் பல அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அனைத்து மக்கள் காணிகளையும் மக்களுக்கு விடுவித்தல்

    ஈ. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தை குறைத்து பாரியளவிலான காணிகளையும் கட்டிடங்களையும் மக்கள் அல்லது அந்தந்த மாவட்டச் செயலர்களிடம் பொருத்தமானதாகக் காணப் படுபவரிடம் மீள ஒப்படைத்தல்.
    இராணுவத்தால் அண்மையில் கையகப்படுத்தப்பட்ட புதிய நிலங்களையும் உரிமையாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட பகுதியின் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தை பணித்தல் வேண்டும்

    உ. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுத்தல்.

    . வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கில் மாகாண ங்களுக்கு வெளியில் இருந்து மக்களை குடியேற்றுவதற்காக நடைபெறும் அனைத்து நில அபகரிப்புகளையும் நிறுத்த வேண்டும்.

    எ. தமிழ் பேசும் பகுதிகளின் தமிழ் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை மாற்றும் நோக்கிலும் குறைக்கும் நோக்கிலும் மேற்கொண்டுள்ள வடகிழக்கு மாகாண எல்லைகளின் அனைத்து மீள் நிர்ணயங்களையும் மதிப்பாய்வு செய்தல். மாகாணங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கு மாறாக அப்பகுதி மக்களுக்கான போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
    வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகளுக்கு எல்லை நிர்ணயம் தேவையில்லை.

    ஏ. தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நோக்கில் முன்மொழியப்படும் தேர்தல் நடைமுறைகள் மீளாய்வு செய்யப் பட வேண்டும்.
    இதுவரை பின்பற்றப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொடர வேண்டும்.

    ஐ. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் முறையான அரசியலமைப்பு முன்வைக்கப்படும் வரை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட பதின்மூன்றாவது திருத்தத்தில் தற்போதுள்ள அனைத்து ஏற்பாடுகளையும் அமுல்படுத்தவும்.
    ஆளுநரின் கைகளில் உள்ள நிதி அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

    . வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முதலீடுகளைப் பெறுவதற்கு மத்திய அரசினால் எந்த தடைகளும் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப் பட வேண்டும்.
    நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், சர்வதேச வர்த்தக நடைமுறைகளின் அடிப்படையில் போதுமான உத்தரவாதங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவிலான மூலதனத்தைக் கொண்டுவரத் தயாராக உள்ளனர்.
    தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை. நாம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் தமிழ் புலம் பெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளோம், அவர்களில் பலர் இந்த நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளனர். ஆனால் கொழும்பு அரசாங்கங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த இடைக்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு சர்வதேச முதலீடுகளை வரவழைத்து பாதுகாக்கும் அதிகாரம் வழங்கப்படுமாயின் பலர் இங்கு வந்து முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
    தேசம் அல்லது தேசங்களின் உரிமைகளை ஒரு முறையான அரசியலமைப்பு அதன் ஏற்பாடுகளில் அங்கீகரிக்கிறது, அத்தகைய அதிகாரங்கள் தாமாகவே சமக்ஷ்டி அமைப்பில் உறுதி செய்யப்படும்.
    வரி நிவாரணம் மற்றும் காணி நிலம், நிர்வாகம், உட்கட்டமைப்பு போன்ற பிற சலுகைகளுக்கான அதிகாரங்கள், முறையான அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் வரை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களுக்கு விடயங்களை எளிதாக்கும் போது, பாரிய அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை தருவிக்கும் நிலை உருவாகும்.

    ஒவ்வொரு வேட்பாளரிடமிருந்தும் அவர்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக கேட்டறிந்தபின், 2022 ஜூலை 20 அன்று எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பரிசீலிப்போம்.

Leave a Reply