1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறைமை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக இந்த நடைமுறை நாடாளுமன்ற செயலாளரின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார்.
இந்த வாக்களிப்பின்போது, நாடாளுமன்ற செயலாளர் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார்.
ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் அவர் அந்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென செயலாளர், நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியும், நேரமும் நாடாளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அத்தகைய திகதி நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்திலிருந்து 48 மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உரித்துடையதாக இருக்கும் என்பதுடன், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் ‘1’ எனும் எண்ணை இடுதல் வேண்டும்.
பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.
இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் 2,3,எனும் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.
இவ்வாறு வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்படும்.
அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் அரைவாசிக்குக் கூடுதலான வாக்குகளைப் ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால்,தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அதேநேரம், வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் எவரும் பெறாதவிடத்து இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவுகள் சரிபார்க்கப்படும்.
வாக்கு எண்ணுகையின் முடிவில் வேட்பாளர் எவருமே செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றில்லாதவிடத்து அந்த எண்ணுகையின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.
அத்துடன், இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் திருவுளச்சீட்டின் மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்.
பிறசெய்திகள்





