
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரைதுறைப்பற்று – ஆறுமுகத்தான்குளம் கிராமத்துக்கும் ஒட்டுசுட்டான் ஒதியமலை , அம்பகாமம் போன்ற பல கிராமங்களுக்கும் மாந்தை கிழக்கு சிறாட்டிக்குளம் போன்ற பல கிராமங்களுக்கும் துணுக்காய் , ஐயன்கன்குளம் , பழைய முறிகண்டி , தேராங்கண்டல் , புத்துவெட்டு வான் , அமதிபுரம் , ஆரோக்கியபுரம் , அம் பலப்பெருமாள்குளம் , கோட்டைக்கட்டிய குளம் , தென்னியங்குளம் , உயிலங்குளம் , புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களுக்கும் பஸ் சேவை இடம்பெறுவதில்லை .
இதனால் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு அந்தப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் . பஸ் சேவைகள் உள்ள கிராமங்களுக்கே தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன .
இந்தநிலையில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளற்ற கிராமங்களுக்கு குறைந்தது 15 நாள்களுக்கு ஒரு தடவையேனும் நடமாடும் மருத்துவ சேவையை நடத்துவதற்கு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் .





