குருந்தூர் மலை விவகாரத்தில் திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்று!

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் காவ்துறையினர் உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14.07.2022 அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறைப்படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் முல்லைத்தீவு காவல்துறையினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து நேற்றையதினம் (19)குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்தது.

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டு வருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் கூறினர்.

எனவே மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.

இங்கு நிலைகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் நீதிமன்றிலே வருகை தந்து குறித்த வழக்கிற்கான புதிய திருத்திய கட்டளையை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

Leave a Reply