யாழ்.மாநகர சபையின் “காவல் படை”வழக்கிலிருந்து முதல்வர் விடுதலை சீருடைகளையும் ஒப்படைக்க உத்தரவு!

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட “காவல் படை” தொடர்பிலான வழக்கிலிருந்து யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த காவல் படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , வழக்கினை மேற்கொண்டு நடாத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்தமையை அடுத்து யாழ். மாநகர முதல்வரை வழக்கில் இருந்து மன்று விடுவித்து விடுதலை செய்ததுடன் , சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த காவல் படையின் சீருடைகளையும் மாநகர சபையிடம் ஒப்படைக்க மன்று உத்தரவிட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டது. யாழ்.மாநகர சுகாதாரத்தை மேம்படுத்துதல் , குப்பைகளை பொது இடங்களில் வீசுபவர்கள் , பொது இடங்களில் துப்புபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தண்டம் விதித்தல் , தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டதாக யாழ் மாநகர சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply